Maria திரைப்படத்தின் விமர்சனம்:
கதைக்கரு:
இப்படத்தின் நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் ஒரு கன்னியாஸ்திரி. கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார், இதை ஏற்க மறுக்கிறது அவரின் குடும்பம். அதனோடு அவரை வீட்டை விட்டு துரத்துகின்றனர் . தன் உறவினரான சிது குமரேசன் அவர்களின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அவர், அதற்கு எதிரான சாத்தானை வழிபடும் குழுவுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, சாத்தான் வழிபாடு என்றால் என்ன?, அதன் பின்னணி என்ன ? என்பதை விரிவாக சொல்வது தான் ‘மரியா’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சையான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பவர், படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
படத்தின் பின்னணி இசை அமைத்திருக்கும் அரவிந்த் கோபால கிருஷ்ணன், தன் வேலையை அற்புதமாக செய்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் பெரும் தொய்வு, மிக நீண்ட காட்சியமைப்புகள், நமக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆங்கிலம் தமிழ் கலந்து மிக நீள வசனங்களை துல்லியமாக புரியும் வகையில் நடித்து அசத்தியிருக்கிறார் பாவல் நவகீதன். நாயகியின் உறவினராக சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி கே.சுதன் , சர்ச்சையான கதையை தேர்ந்தெடுத்து துணிச்சலாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒரு மதத்தின் புனிதை கெடுக்கும் வகையில் காட்சிமைப்புகள், அந்த மதத்தினரை புண்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், மனதையும் வெளிப்படுத்தும் விதமாக முதல் பாதி இருந்தாலும், இரண்டாம் பாதி தன் இச்சைக்காக ஏங்கும் பெண்ணாக திரைக்கதை அமைத்திருப்பது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் “மரியா” சமூகத்திற்கு தேவையற்றது.